Discovery of an Ultra Luminous Pulsar

astronomy Jul 6, 2020

கட்டுரை: 4

அரிதான அதி-பிரகாசமான ஒளி

இரவு வானத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கும் போதெ கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய கோடிக்கணக்கான விண்மீன்களையும், சில எரிநட்சத்திரங்களையும், நிலவு, கோள்கள் என பலவற்றையும் காணலாம். நம்மிடம் ஒரு தொலைநோக்கி இருந்தால் இன்னும் அதிகமான வண்ணமயமான வான்பொருட்களைக் காணலாம். அந்த வகையில் நமது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பிய அஸ்ட்ரோ சாட் (Astrosat) எனப்படும் விண்வெளியில் நிலைப்படுத்தப்பட்டுள்ள நோக்குகூடம் (Space based Observatory) மூலமாக அதிபிரகாசமான X-Ray பல்சார்களை கண்டுபிடித்துள்ளனர்.

அதென்ன பல்சார், இதுவரை கேள்விப்படாத்தாக இருக்கிறதே.. வாருங்கள் பர்சார் என்பதனை பற்றி தெரிந்துகொண்டுவிட்டு ஆய்வுபற்றி அறிந்துகொள்ளலாம். பல்சார்கள் என்பவை மிகவும் வேகமாக இயங்கக்கூடிய மின்காந்த கதிர்களை உமிழும் நியூட்ரான் விண்மீன் ஆகும். நியூட்ரான் விண்மீனானது ஒப்பீட்டளவில் மிகவும் சிறிய மற்றும் அதிக அளவிலான ஈர்ப்புவிசையை உடைய சுழலும் வான்பொருள். இவ்வாறு சுழலும் போது அதன் துருவ முனைகளின் வழியாக அதிக வேகத்தில் பிரகாசமான மின்காந்த கதிர்களை உமிழும்.

சில நேரங்களில் இந்த மின்காந்த கதிர்கள் நமது பூமியை நோக்கி அமையும் போது அது ஒரு கலங்கரை விளக்கத்தைப் போல குறிப்பிட்ட கால இடைவெளியில் துருவங்கள் மாறி மாறி சுழலும். சில நேரங்களில் இந்தவகை ஒளி மூலங்களை பிரபஞ்சத்தின் கலங்கரை விளக்கம் என்றும் அழைக்கின்றனர்.

இந்த வகை பல்சார் ஒளி மூலங்கள் முதன் முதலாக 1967 – ம் ஆண்டு ஜெக்கலின் பெல் பெர்னல் மற்றும் ஆண்டனி ஹெவிஸ் ஆகியோரால் கண்டறியப்பட்டது. முதன் முதலாக இவர்கள் இந்த ஒளி மூலங்களை கண்டறிந்த போது இது பிரபஞ்சத்தின் வேறெங்கே உள்ள வேற்றுகிரகவாசிகளால் உருவாக்கப்பட்டது என கருதினர். அதற்காகவே முதன் முதலாக கண்டறியப்பட்ட LMG-1 ஒளிமூலத்திற்கு சிறிய பச்சை மனிதன் என வேடிக்கையாக பெயரிட்டனர். தொடர்ச்சியான ஆய்வின் மூலமாக இது இயற்கையான ஒரு வான்பொருளில் ஏற்படக்கூடியது என்பதை கண்டறிந்தனர்.

இந்த ஒளியானது நமது பூமியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு சிறிய ஒளிப்புள்ளியைப் போல இருக்குமாம். ஆனால் அதன் பிரகாசம் ஒரு அண்டத்தின் பிரகாசத்திற்கு சமமாக இருக்குமாம். இந்த பல்சாருக்கு RXJ0209.6-7427 என பெயரிட்டுள்ளனர்.

இந்த ஒளிகற்றையானது அரிதாக காணக்கிடைக்கக்கூடிய வகையைச் சார்ந்தது. இது சிறிய மற்றும் பெரிய மெக்லானிக் மேகங்களை இணைக்கும் பாலம் போன்ற அமைப்பில் இருந்து தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அது என்ன மெக்லானிக் மேகத்தின் பாலம் (Maglanic Cloud Bridge) என ஆச்சரியமாக இருக்கிறதா !!.. அதாவது மெக்லானிக் மேகங்கள் என்பவை நெபுலாக்கள் (Nebula) வகையை சேர்ந்தவை. இந்த நெபுலாக்களில் தான் நட்சத்திரங்கள் பிறக்கின்றன. இது போன்ற பல நெபுலாக்கள் இந்த பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கின்றன. ஆனால் இந்த மெக்லானிக் மேகங்கள் எனப்படும் இந்த நெபுலாக்களில் சுமார் 43000 ஒளி ஆண்டுகள் (Light Years) நீளமான வாயுக்கற்றைகளும், தூசுகளும், புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் விண்மீன்களுமாக ஒரு பாலம் போன்ற அமைப்பு உள்ளது. இந்த பாலம் போன்ற அமைப்பு பெரிய மற்றும் சிறிய மெக்லானிக் மேகங்களை இணைப்பதை போன்ற தோற்றம் உள்ளது.

இங்கு உருவாகி இருக்கும் இந்த அதிபிரகாசமாக ஒளியானது ஒரு கருந்துளையிலிருந்து உருவாகி இருக்கலாம், அல்லது மிக வேகமாக இயங்கக் கூடிய நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வை கல்கத்தாவில் இயங்கிவரும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளி ஆய்வுத்துறை விஞ்ஞானிகள் (Indian Institute of Science Education and Research – Centre for Excellence in Basic Science) கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் Astrosat Observatory – ல் இணைக்கப்பட்டுள்ள மென் X-Ray தொலைநோக்கி மூலமாகவும், Large Area X – Ray Proportional Counter மூலமாக கண்டறிந்துள்ளனர்.

இதுமாதிரியான அதிபிரகாசமான ஒளிமூலங்களாக இதுவரை 8 மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இது இரண்டாவது அருகில் உள்ள பிரகாச ஒளி மூலமாகும்.

Tags