LISA - The biggest space mission ever

கட்டுரை: 6

பிரப்ஞ்சத்தின் ஈர்ப்பு அலைகளும் !!

பூமியை விட மிகப்பெரிய தொலைநோக்கி !!

அது என்ன ஈர்ப்பு அலைகள்?? இதுவரை நாம் ஈர்ப்பு விசை (Gravitational Force)  குறித்து மட்டும் தானே கேள்விபட்டிருக்கிறோம். இது புதிதாக இருக்கிறதா!. இது ஒன்றும் புதிதல்ல. சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. அல்பர்ட் ஐன்ஸ்டைனால் 100 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழியப்பட்ட கோட்பாடு தான் இந்த ஈர்ப்பு அலைகள் (Gravitational Waves). அன்றிலிருந்து விஞ்ஞானிகள் இந்த அலைகளை ஆய்வு செய்துவருகின்றனர். ஆனால் கண்களுக்கோ அல்லது நமது தொலைநோக்கிகளுக்கோ அகப்படாமல் வித்தை காண்பித்துவந்தது. ஆனால் கடந்த 2015 -ம் ஆண்டு இந்த தேடலுக்கு விடை கிடைத்துவிட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். ஆம் ஈர்ப்பு அலைகள் இருப்பது உண்மைதான் எனபதை உலக விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

இரண்டு மிகப்பெரிய கருந்துளைகள் ஒன்றோடொன்று மோதி இணையும் போது பிரபஞ்சத்தின் அனைத்தும் ஏன் காலமும் வெளியும் (Space Time) கூட அதிர்வுறும். அவ்வளவு பயங்கரமான அதிவாக இருக்கும். கருந்துளை குறித்து நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். ஒரு கருந்துளை என்பது நமது சூரியனைப் போல பலகோடி சூரியன்களின் நிறைகளை உள்ளடக்கியதாக இருக்கும் வான்பொருளாகும். இந்த அளவுக்கதிகமான நிறையானது அதிபயங்கரமான ஈர்ப்புவிசையை இந்த வான்பொருளுக்கு தருகிறது. இதுவரை நாம் அறிந்ததில் ஒளி தான் வேகமாக செல்லக்கூடியது. ஒரு வினாடியில் 3 லட்சம் கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடியது. ஆனால் இந்த ஒளி கூட வெளிவரமுடியாத அளவிற்கு ஈர்ப்புவிசையுடையது இந்த கருந்துளை.

அவ்வாறான கருந்துளைகள் மோதும் போது உருவாகும் அதிர்வலைகளை ஆய்வுசெய்ததன் மூலமாகத்தான் ஈர்ப்புஅலைகள் இருப்பதை LIGO (laser Interferometer Gravitational Observatory) எனும் பிரமாண்ட உணர்வி மூலமாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த உணர்வி நமது பூமியிலேயே நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள ஒன்று. அப்போது தான் நமது விஞ்ஞானிகளுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர்கள் கண்டறிந்த ஈர்ப்பு அலைகளின் அலைநீளம் மற்றும் அதிர்வெண் குறித்து சிந்தித்தனர். இந்த பிரபஞ்சம் எவ்வளவு பிரமாண்டமானது, இவ்வளவு பிரமாண்டமான பிரபஞ்சத்திலிருந்து நாம் கண்டுபிடித்துள்ள ஈர்ப்பு அலைகள் ஏன் நமது பூமியைவிட பெரிதாக இருக்ககூடாது. ஆம், நாம் 2015 – ம் ஆண்டு கண்டுபிடித்ததாக கூறியது அதிக அதிர்வெண் (அதாவது குறைந்த அலைநீளம்) கொண்ட ஈர்ப்பு அலைகள் தான்.

எனவே விஞ்ஞானிகள் நமது பூமியைவிட பெரிய அலைநீளம் கொண்ட ஒரு ஈர்ப்புஅலையை எப்படி ஆய்வுசெய்வது என சிந்தித்தபோது கிடைத்தது தான் LISA (Laser Interferometer Space Antenna) திட்டம். இந்த திட்டத்தின் படி பூமியைவிட மிகப்பெரிய ஒரு தொலைநோக்கி போன்ற உணர்வியை விண்வெளியில் நிலைநிறுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டமானது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், சர்வதேச விஞ்ஞானிகள் குழுமமும் இணைந்து பணியாற்றிவருகின்றனர்.

இந்த திட்டமானது 2030ம் ஆண்டின் துவக்கத்தில் நிறைவேற்றப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கான சோதனை ஓட்டமாக கட்ந்த     2015-ம் ஆண்டே LISA Pathfinder எனும் சிறிய ரக உணர்வியை விண்வெளியில் நிலைப்படுத்தி சோதனை செய்துள்ளனர் விஞ்ஞானிகள். அதன் வெற்றியையும், அந்த திட்டத்தின் கிடைத்த படிப்பினைகளையும் கருத்தில் கொண்டு மிகத்தீவிரமாக இந்த பிரமாண்ட திட்டத்தை நிறைவேற்றிட வேலைசெய்து வருகின்றனர்.

விண்வெளி அறிவியல் என்பது மனிதன் சிந்திக்க துவங்கியது முதலே துவங்கியது மிகப்பழமையான அறிவியல். அன்று வெறும் கண்களுக்கு மட்டும் தெரிந்த ஒளியை கொண்டு ஆய்வு செய்து வந்த நாம், இன்று கண்களுக்கு தெரியாத பலவற்றையும் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த LISA திட்டம் நிறைவேறும்பட்சத்தில் நாம் இந்த பிரபஞ்சம் குறித்த ஆய்வில் மேலும் ஒருபடி முன்னேறியிருப்போம் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் ஒரு பிரமாண்டமான ஆய்வின் மூலமாக உங்களை சந்திக்கிறோம்.. நன்றி..