Annular Solar Eclipse Campaign - Programme 1

Solar Eclipse Nov 22, 2019

AnnularSolarEclipse

முழு வளைய சூரிய கிரகணத்திற்கான பிரச்சாரப் பயணம் - 1

சென்னையிலிருந்து கோவைக்கு அவசர அவசரமாக புறப்பட்டாச்சு.. பேருந்தா, தொடர்வண்டியா என்ற குழப்பம் சிறிது நேரத்தை விழுங்க, ஒரு வழியாக பேருந்தில் புறப்பட்டேன். ஒரு சிறு குழப்பத்துடன் தான் பயணத்தை துவங்கினேன். நேற்று மாலை திடீரென சித்ரா மேடம் (துடியலூர் பள்ளி ஆசிரியர்) போன் செய்து அவர்களது மேலதிகாரி நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதி கடிதம் கேட்கிறார் மின்னஞ்சல் செய்துவிடுங்கள் சார் என்கிறார். நமக்கு தான் லோயர்கேம்ப் பள்ளிகூடம் நல்ல அனுபவத்தை தந்துள்ளதே. அதாவது மேலதிகாரி மின்னஞ்சல் கேட்கிறார் என்றால் ஏதோ சிக்கல் உள்ளதென அர்த்தம். சரி இருந்தாலும் பரவாயில்லை போகலாம் என புறப்பட்டுவிட்டேன். ஏனெனில் குழந்தைகள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

பேருந்தில் வரும் போதே நிறைய யோசித்து கொண்டே வந்தேன். இது தான் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள சூரிய கிரகண பிரச்சாரத்திற்கான முதல் பயணம். காலை மிகுந்த சோர்வுடன் ஒரு லாட்ஜுக்கு சென்று குளித்து தயாராகிவிட்டு 9.00 மணிக்கு செல்ல வேண்டிய பள்ளிக்கு 8.45 மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன்.

மாணவர்கள் மத்தியில் ஏதோ ஒருவகை உற்சாகம். அரசு பள்ளிகூடத்திற்கே உரித்தான குறும்புகளும், வெட்கமும் என்னை கடந்து சென்ற ஒவ்வொரு மாணவர்களின் முகத்திலும் பரந்து விரிந்திருந்தது. அப்படி இப்படி என அரசுபள்ளி ஆசிரியர்களுக்கே உரித்தான பதிவேட்டு பணியை முடித்தவுடன் 9.30 மணியளிவில் நிகழ்ச்சியை துவங்கினோம்.

வழக்கம்போலான குழந்தைத்தன்மை மாறாத வடிவமைக்கப்படாத குழந்தைகள் இவர்கள். சுட்டித்தனமும், வீண் சண்டைகளுக்கும், ஆச்சர்யமான ஒன்றை பார்க்கும் போது அப்பாவிகளாக அகன்று விரியும் கண்களும் இன்று என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டன. இவையனைத்திற்கும் மத்தியில் இன்று வந்த விசயத்தை விட்டு விடக்கூடாதல்லவா! சூரிய கிரகணம் குறித்து பேச ஆரம்பித்தேன். ஆங்காங்கே முனுமுனுப்புகளுடன் சில சில சேட்டைகள் இருந்தாலும் சில கண்கள் என்னை இடைவிடாமல் பார்த்துக்கொன்டே இருந்தன. அந்த கண்களில் ஏதோ ஒருவித அறிவுத்தாகத்தை பார்க்கமுடிந்தது. முடிந்தவரை அவர்களுக்கு எளிமையாக எப்படி விளக்க முடியுமோ அப்படி விளக்கிவிட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தேன்.

ASE

முடிவாக கேள்வி பதிலுக்கான நேரம். மாணவர்கள் மத்தியிலிருந்து கேள்வியெதுவும் வரவில்லை. புரிந்துகொண்டேன், ”இவ்வளவு நேரம் மூச்சு தினறத் தினற வச்சு செஞ்சதெல்லாம் வீணா போச்சே!!”. ஒரு வழியாக சில முணு முணுப்புகளோடு சில கேள்விகள், விடையளித்து முடித்தேன். அப்போது ஒரு மூளையிலிருந்து ஒரு கேள்வி, சார் சூரிய கிரகணம் நடைபெறும் நாளில் 7 கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமையுமாமே? அதனால் நமது பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிடுமாம்! ஜோசியர் சொன்னார் என முடிந்தது அந்த குரல். நிச்சயம் பட்டம் படித்தவரின் குரல் தான் அது. ஆச்சரியம், பட்டம் படித்தவர்கள் தான் விரைவாக ஏமாற்றப்படுகிறார்கள், ஏமாறவும் முடிகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக திட்டமிட்டு ஏமாற்றப்படுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட பட்டதாரிகள் தான் நமது தேசத்தில் அதிகம் என என்னை நானே சமாதானம் செய்துகொண்டு புறப்படத்தயாரானேன்.

ASE

புறப்படும் முன் திடீரென சூரிய வெளிச்சம். அதுவரை மேகமூட்டமாக இருந்ததால் மாணவர்களுக்கு சூரிய கண்ணாடியை பயன்படுத்தி காட்ட முடியவில்லை. ஒருவழியாக புறப்படும் முன்பாக சூரிய ஒளி தெரியவே மேகம் மறைப்பதற்கு முன் சில மாணவர்களுக்கு சூரியனை பார்க்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. சற்று நேரத்திலேயே சூரியன் மறைக்கப்பட்டதால் பெரும்பாலான கண்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றன, எனக்கும் வருத்தமாக இருந்தது. சமாளித்துவிட்டு, அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு புறப்பட்டேன்.

அடுத்த பயணத்தில் சந்திப்போம்.. நன்றி.

Tags