Exoplanets - புறக்கோள்கள் - Part 2

osf Oct 31, 2019

புறக்கோள்கள் பற்றிய ஆய்வுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்

புறக்கோள்கள் (Exoplanets) பற்றிய அறிமுகத்தை நேற்றைய கட்டுரையில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக புறக்கோள்கள் எப்படி கண்டுபிடிக்கப்படுகின்றன என பார்க்கலாம்.

புறக்கோள்கள் பல வழிமுறைகளில்‌ கண்டுபிடிக்கப்படுகின்றன. நாம் இங்கு குறிப்பாக இரண்டு முறைகளைப் பற்றி பார்க்கலாம். ஒன்று இடைமறிப்பு ஒளிஅளவீடு (Transit Photometry) முறை, மற்றொன்று டாப்ளர் ஒளிவிளைவு (Doppler Effect).

முதலாவதாக,

இடைமறிப்பு ஒளிஅளவீடு முறை - Transit Photometry:

இடைமறிப்பு ஒளிஅளவீடு என்ற வார்த்தையே அதன் விளக்கத்தையும் கொண்டுள்ளது. நாம் முன்பே பார்த்தது போல புறக்கோள்கள் ஏதேனும் ஒரு விண்மீனை மையமாக கொண்டு சுற்றிவரும் வான் பொருளாகும். கோள்கள் பொதுவாக ஒளிர்வது இல்லை. ஆனால் விண்மீன்கள் ஒளியை உமிழும் வான் பொருள்.

சரி வாங்க, ஒரு சின்ன விளையாட்டு விளையாடிவிட்டு வரலாம். நாம் சிறுவர்களாக இருக்கும் போது மறைந்து விளையாடுடிய்யிருப்போம் அல்லவா! அந்த விளையாட்டு தான். இங்கு ஒருவர் மற்றொருவரை மறைக்க வேண்டும். இருவரும் ஒரே அளவுள்ளவராக இருந்தால் ஒருவர் மற்றொருவரால் எளிமையாக மறைக்கப்பட்டுவிடுவார். நாம் அவர்களை புகைப்படம் எடுத்தால் ஒரு நபராக தான் தெரிவார் அல்லவா? ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கிரிக்கெட் பந்தை கொடுத்து 6 அடி உயரமுள்ள நல்ல வாட்ட சாட்டமான நபரை மறைக்க சொன்னால் முடியுமா? நிச்சயம் முடியாது. முடிந்தவரை அவரது வாயை மறைக்கலாம் அல்லது கண்களை மறைக்கலாம் அல்லது காதை மறைக்கலாம். இப்போது அவரை புகைப்படம் எடுத்தால் நாம் அந்த நபரை புகைப்படம் எடுக்க முடியும், ஆனால் கிரிக்கெட் பந்தால் மறைக்கப்பட்ட பகுதி மட்டும் தெரியாது.

அது போன்ற ஒரு நிகழ்ச்சி தான் இங்கும் நடைபெறுகிறது. அதாவது புறக்கோள்கள்  தான் சுற்றிவரும் விண்மீனை சில நேரங்களில் மறைக்கும், அதாவது விண்மீனிலிருந்து வரும் ஒளியை மறைக்கும். இதற்கு கோள்களின் இடைமறிப்பு என்று பெயர். அனைத்து நேராங்களிலும் இந்த ஒளி இடைமறிப்பு நடைபெறாது. கோள்கள் தனது விண்மீனை சுற்றிவரும் கால அளவு மாறும். அதற்கேற்றாற் போல இடைமறிப்பும் நிகழும். இது போன்ற இடைமறிப்புகள் நமது சூரியகுடும்பத்திலும் நடைபெற்று வருகின்றன. நம்மால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் இடைமறிப்புகளை காணமுடியும்.

அது சரி கோள்களில் இடைமறிப்பிற்கும் கிரகணங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?. ஆம், இடைமறிப்புகளும் ஒருவகையில் கிரகணங்களே. நாம் சூரிய கிரகணங்கள், சந்திர கிரகணங்கள் போன்றவற்றை கேள்விப்பட்டிருப்போம். சூரிய கிரகணம் சூரியனை நிலவு மறைப்பதால் ஏற்படுவது, அதேபோல் சந்திர கிரகணம் என்பது சந்திரனை பூமியின் நிழல் மறைப்பதால் ஏற்படுவது‌. இங்கு சந்திரனும், சூரியனும் முழுமையாக மறைக்கப்படுகின்றன. ஒரு ஒளிரும் பொருளை முழுமையாக மற்றொரு பொருள் மறைத்தால் அதற்கு கிரகணம் என்று பெயர். ஆனால் கோள்களின் இடைமறிப்புகளில் விண்மீன்கள் முழுமையாக மறைக்கப்படுவதில்லை. விண்மீன்களின் ஒளிரும் பகுதியை ஒரு சிறிய பந்து மறைத்து செல்வதை போல தோன்றும்.

இது போன்ற இடைமறிப்புகளால் விண்மீன்களின் ஒளியில் ஏற்படும் அளவு மாறுபாட்டை கொண்டு அந்த விண்மீனை சுற்றி ஏதேனும் கோள்கள் உள்ளனவா? எவ்வளவு தொலைவில் உள்ளது, எவ்வளவு கால இடைவெளியில் சுற்றிவருகின்றன என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடைதேடப்படும். மேலும் உயிர்கள் வாழகூடிய சூழ்நிலைகள் அந்த கோள்களில் உள்ளனவா என்பன போன்ற கேள்விகளுக்கும் விடைகள் தேடப்படும்.

என்ன வாசித்து களைத்து விட்டீர்களா? சரி விடுங்க அடுத்த கட்டுரையில் டாப்ளர் விளைவு குறித்து பார்க்கலாம்.                                              

Tags