Gender Talks in Tamil - 06: Understanding Sexuality & Challenges faced by Gay men | பால்-ஈர்ப்பு குறித்து புரிந்துகொள்ளலாம் & ஒரு ஆண் தன்பாலின ஈர்ப்பாளர் சந்திக்கும் சவால்கள்

gendertalks Nov 23, 2020

அன்பு, பாசம், காதல், கோபம், அச்சம் போன்ற மனரீதியான உணர்வுகளை புரிந்துகொள்ளாத கேடுகெட்ட சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம்.

ஒருவருக்கு  பூக்கள் மீது அளவுகடந்த அன்பு இருக்கலாம். அது அவரது விருப்பம். சில வேலைகளில் யாரேனும் அவரது பூக்கள் மீது கைவைத்துவிட்டால் போதும் அவர்களுக்கு உண்டாகும் கோபம் கடுமையானதாக இருக்கும். சிலருக்கு சில பறவைகளின் மீது காதல் ஏற்படும், சிலருக்கு சில விலங்குகளின் மீது அளவு கடந்த நேசமும், காதலும் இருக்கும். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தனது உயிருக்கும் நிகராக செடிகளை, பூக்களை, மரங்களை, செல்லப்பிராணிகளை, பறவைகளை பார்த்துகொள்கின்றனர்.

இதில் ஏதேனும் இயற்கைக்கு முரணாக தோன்றுகிறதா? உங்கள் பதில் பெரும்பாலும் இல்லை என்று தான் இருக்கும். இது போன்ற செயல்பாடுகளை முதலில் நமக்கு முரணாக பார்க்கும் வழக்கமே இல்லை. அதேபோல தான் ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் மீது ஏற்படும் அன்பு, பாசம், காதல், கோபம், அச்சம் எல்லாம்.

நமது வீடுகளில் நாம் நெருங்கி பேசி நமது ரகசியங்களை, நமது மனரீதியான உணர்வுகளான பயம், காதல், அன்பு முதலானவற்றை பகிர்ந்துகொள்ள யாரேனும் இருப்பர். அவர்களுடன் பகிர்துகொள்ளும் அளவிற்கு வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ள நாம் விரும்பமாட்டோம். ஒரு சிலர் தனது தாய் அல்லது தந்தையிடம் பகிர்ந்துகொள்வார்கள். இன்னும் சிலர் தனது சகோதர சகோதரிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். இன்னும் சிலருக்கு நண்பர்கள் துணையாக இருப்பார்கள். நண்பர்களிலும் ஒரு சிலர் மட்டுமே மனம்விட்டு பேசும் அளவிற்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனதிற்கு நெருக்கமான நண்பர்களாக ஆண் நண்பர்களும் இருப்பார்கள், பெண் நண்பர்களும் இருப்பார்கள். இங்கு நாம் மூன்றாம் பாலினத்தவரை குறிப்பிடாததற்கு காரணம், நமது வீடும், சமூகமும் அவர்களை இன்னும் ஒரு மனிதாராக கூட அங்கீகரிக்காதது தான். அப்படி இருக்கையில் எங்க போய் மூன்றாம் பாலின நண்பரை தேடுவது? (விதிவிலக்காக சிலர்)  

நாம் நமது அன்றாட செயல்பாடுகளில் தோன்றும் சில உணர்வுகளை பகிரவே மனதிற்கு நெருக்கமானவர்கள் தேவைப்படும் போது, வாழ்க்கை துணையாக, எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நமது மன உணர்வுகளை புரிந்துகொள்ள கூடிய நபர்களை தேவைதானே?

அப்படி இருக்கையில் அது ஒரு ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? நமக்கு யார் அன்பையும், அரவணைப்பையும், காதலையும், பரிசளிக்க காத்திருக்கிறார்களோ அவர்களை தானே நாம் விரும்ப முடியும். அது ஒரு பெண்ணிற்கு மற்றொரு பெண்ணிடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் ஒரு இணையாக வாழ்வது எந்தவிதத்தில் இயற்கைக்கு முரணாகும்? அதேபோல ஒரு ஆண் மற்றொரு ஆணை தனது வாழக்கை இணையாக தேர்ந்தெடுப்பதும் அவரது மன உணர்வு சார்ந்த ஒன்று அல்லவா! இதனை இழிவாகவோ, இயற்கைக்கு முரணானதாகவோ கருதுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

பெரும்பாலும் நமது சமுதாயத்தில் உள்ள ஒரு தவறான புரிதல் “ஒரு ஆண் பெண் திருமணம் செய்துகொள்வது என்பது  அவளை புணர்ந்து குழந்தையை உருவாக்குவதற்கு மட்டும் தான்”. இது எவ்வளது மட்டமான, கேவலமான புரிதல். பெண்ணை போகபொருளாக, விற்பனை சரக்காக, அடிமையாக கருதும் மனோபாவத்தை நம்மில் பலரும் கொண்டுள்ளதன் வெளிப்பாடு தான் இது. இருவர் இணையாவது என்பது அவர்களது மன ரீதியான உணர்வுகள் சார்ந்தது. நாம் முன்பு பேசியது போல அது இருவரையும் பாதுகாப்பாக உணரச்செய்ய கூடியது. தங்களது வாழக்கையின் ஒவ்வொரு படிகளையும் புரிந்துகொள்ள கட்டமைப்பது. இவ்வளவையும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணால் மட்டுமே கிடைத்துவிடும் என்பதுதான் இயற்கைக்கு முரணானது.

நாம் பொதுவாக குழம்பும் ஒரு இடம், “தன்பாலின ஈர்ப்புள்ளவர்கள் காமத்தை மட்டும் தேடுகிறார்கள்”. இதுவும் இந்த கேடுகெட்ட பழமைவாத சமுதாயத்தால் கட்டமைக்கப்பட்ட தவறான பிம்பம். நீங்களும் இப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கான பதில் இது. நமக்கு எதை வன்புணர்வு, எதை காதல் என அறிந்துகொள்ளும் பக்குவம் இல்லாததன் வெளிப்பாடு தான் இது. நிறைய இடங்களில் குறிப்பாக ஊடகங்களில், சினிமாக்களில் வன்புணர்வையும், தன்பாலின ஈர்ப்பையும் தவறுதலாக சித்தரிக்கின்றனர். இவற்றை அப்படியே நுகரும் நம்மைபோன்ற அரைவேக்காடுகள் “ஐயய்யோ அவனா நீ? அவளா நீ?” என்பது போன்ற வக்கிரமான கேள்விகளை கேட்கப்பழகுகிறோம். குழ்நதைகளையும் பழக்கப்படுத்துகிறோம்.

உங்களது புரிதலில் இருக்கும் தவறுகளையும், கோணல்களையும் சரி செய்ய வேண்டிய நேரம் இது. இதற்கு மேலும் உங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து மூடிக்கொண்டு தூங்கவும், கதவை. சமூக மாற்றத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

இப்படியாக கருத்துரையானது அருமையாக நடைபெற்றது. சமூக செயல்பாட்டாளர் ஸ்ரீதர் மற்றும் சமூக ஊக்கி நவீன் அவர்களும் பல புள்ளிவிவரங்களுடன் அறிவியல் பூர்வமாக பால் ஈர்ப்பு என்பதை விளக்கினார்கள். சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

பங்கேற்க முடியாத நபர்கள் பதிவு செய்யப்பட்ட காணோலி கீழே இணைக்கப்பட்டுள்ளது, அதனை பயன்படுத்திக்கொள்ளவும்.

நன்றி !!

Tags