Webinar Series on Free and Open Source Technologies in Tamil
கட்டற்ற மென்பொருள் தொழில்நுட்பங்கள் - ஓர் அறிமுகம் : இணையவழி தொடர் வகுப்புகள்
அனைவருக்கும் வணக்கம்,
தொழில்நுட்பங்கள் என்பவை நமது வாழ்க்கையோடு ஒன்றிப்போனவையாகிவிட்டன. ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. இதே தொழில்நுட்பங்கள் நிறைய மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றியும் உள்ளது. கல்வி அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் கல்வி வியாபாரமயமாக்கப்பட்டு வரும் சூழலில் அனைவருக்கும் கல்வி என்பது கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்பங்களும் மக்களிடமிருந்து அன்னியமாகி வருகிறது. இன்னும் சில தொழில்நுட்ப வியாபாரிகள் தனது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள மக்களை தீவிரமாக கண்கானிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன?
கல்வியை நாம் தொழில்நுட்பத்திலிருந்து அன்னியப்படுத்த முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். எனவே நமக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், முன்னேற்றத்திற்கு தேவையான கல்வியையும் சமூகமயப்படுத்துவதே சிறந்தது.
அது என்ன சமூகமயம்? ஒரு உதாரணத்தின் மூலம் இதனை புரிந்துகொள்ள முயலலாம். ஒருவர் தான் வசிக்கும் கிராமத்தில் ஒரு பொது இடத்தில் ஒரு மரத்தை நட்டு விடுகிறார். அவர் மரம் வளர்க்க பயன்படுத்திய விதையும் ஊர் பொதுவாக இருந்த மரத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர் விதை எடுத்தபோதும் சரி, அந்த விதையை பொது இடத்தில் வளர்க்க விதைத்தபோதும் சரி அவர் யாருக்கும் எதுவும் கட்டணமாக செலுத்தவில்லை. ஒரு 20 வருடங்கள் கழித்து அந்த மரம் வளர்ந்து பெரிதாகிவிட்டது. தற்போது அவர் மரம் தனக்கு சொந்தம் எனவும், இந்த மரத்தில் இருக்கும் பறவைகளும் தனக்கு சொந்தம் எனவும், இந்த மரத்தில் இருந்து உருவாகும் ஆக்ஸிஜனுக்கும் ஊர் சார்பாக கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், மரத்தின் நிழலை பயன்படுத்தவும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறுகிறார். அவர் கூறுவது சரியா? இந்த கேள்வியே பொருளற்றது. ஏனெனில் முதலில் அவருக்கு கிடைத்த விதை அதற்கு முன் வேறு யாரோ ஒருவராலோ அல்லது ஏதேனும் பறவையின் எச்சத்திலிருந்தோ விளைந்ததாக இருக்கும். அடுத்தது அவர் விதையை விதைத்த மண் என்பது விதை முளைப்பதற்கு தேவையான பலவகை ஊட்டச்சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்துந்ததனால் தான் மரமாக வளர்ந்து நிற்கின்றது. அந்த ஊட்டச்சத்தானது பல ஆண்டுகளாக மண்ணில் சேர்ந்த இலைகள், மக்கிய குப்பைகள், மண்புழுக்கள் என பலவற்றின் கூட்டுமுயற்சி. இப்படி இருக்கையில் நான் தான் மண்ணில் விதையை தூவினேன் என்பதற்காக அவர் கூறிய அனைத்திற்கும் உடன்பட முடியுமா?
அது போலதான் தொழில்நுட்பங்கள் என்பவையும் என்றோ ஒருவரால் வளர்க்கப்பட்ட மரம், அவற்றிலிருந்து தூவப்பட்ட விதைகள் தான் இன்று நாம் பயன்படுத்தும் பல செயலிகளும், கருவிகளும். அதற்கு உரமிட்டவர்கள், அவ்வப்போது ஏற்படும் இடர்பாடுகளை சரி செய்தவர்கள் அனைவரும் பொதுவானவர்களே, நமது கதையில் கண்ட மண்புழுக்களைபோல. இவர்கள் இல்லையெனில் இந்த தொழில்நுட்பங்கள் என்பது சாத்தியமே இல்லை. எனவே தொழில்நுட்பங்கள் என்பவை கட்டுபாடுகள் அற்ற, அனைவருக்கும் பொதுவானதாக, சுதந்திரமானவையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது தான் அது உயர்ந்து வளர்ந்த மரத்தை போல அனைவருக்கும் நிழலையும், பறவைகளுக்கு கூடையும் கொடுக்கும். மரம் பறவைகளுக்கு கூடு அமைக்க இடம் கொடுப்பதனால் தான் பறவைகள் மரத்தின் விதைகளை மண்ணில் பரவச்செய்கின்றன. அதுபோல தொழில்நுட்பங்களை பொதுவானவைகளாக்கும் போது தான் மேலும் அது வளரும், இன்னும் பல ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களுக்கு உதவும்.
சரி இவ்வளவு பேசி விட்டீர்களே எங்களுக்கு தொழில்நுட்பங்கள் என்றால் என்னவென்றே தெரியாதே. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக பயன்படுத்திவருகிறோம். எங்களுக்கு இருப்பதே போதும், அது பொதுவாக இருந்தால் என்ன? சுதந்திரமாக இருந்தால் என்ன? இது போன்ற கேள்வியை கேட்பவராக இருந்தால் உங்களை அழைக்க வேண்டியது ”அடிமை” என்று தான். உங்கள் வீட்டிற்குள் ஒருவர் திடீரென வந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் உங்களது அந்தரங்கங்களை திருடிச் சென்று அதனை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தால் ஏற்றுகொள்வீர்கள் என்றால் உங்களை அடிமை என்று கூறாமல் எப்படி அழைப்பது !
ஆம் இன்று நாம் பயன்படுத்தும் பெருவாரியான தகவல் தொழில்நுட்ப செயலிகள், சமூக ஊடகங்கள், இணைய தளங்கள், ஏன் உங்களது ஸ்மார்ட் போனும் அதில் இருக்கும் உங்களுக்கான தொடர்பு எண்ணும் கூட உங்களை வேவு பார்க்கிறது, உங்களது அந்தரங்கங்களையும், ஆபாசங்களையும் உங்களுக்கே தெரியாமால் திருடி விற்பனைசெய்கிறது. நீங்கள் உங்களுக்கே தெரியாமல் விற்கப்படுகிறீர்கள். நமக்கும் உடலைவிற்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களாவது தனது சுய அறிவோடு தனது உடலை விற்று பொருளை ஈட்டுகிறார்கள். இங்கு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் போன்ற தொழில் நுட்பங்களுக்கு நாமே செலவும் செய்கிறோம், நாமே அனுமதியும் கொடுக்கிறோம், ஆனால் பொருளீட்டுவது என்னவோ எவனோ ஒருவன். நம்மை விற்பனை செய்ய அவன் யார்? நீங்கள் என்ன நினைக்க வேண்டும், எதை உண்ண வேண்டும், என்ன பொருட்களை வாங்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது வரை தொழில்நுட்ப வியாபாரிகள் முடிவு செய்ய துவங்கிவிட்டார்கள். சமூகத்தால் பல ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பங்கள் திடீரென ஒரு வியாபாரி தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்க இயலும். நினைத்துப்பாருங்கள் முதன் முதலில் கணினியை வடிவமைத்தவர் யாருக்கும் கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று நாம் பயன்படுத்தும் எளிய கையடக்க கணினிகள் சாத்தியமாகி இருக்குமா? அதோ போல உலகளாவிய வலை எனப்படும் WWW என்பது காப்புரிமையாக்கப்படாமல் சுதந்திரமாக மக்களுக்கு வழங்கப்பட்டதால் தான் இன்று நம்மால் இணையதளங்களை பயன்படுத்த முடிகிறது.
தொழில்நுட்பங்களின் பொதுவுடைமையையும், சுதந்திர தன்மையையும், கட்டற்ற தன்மையையும் இன்று நாம் உறுதி செய்யாவிட்டால், தொழில்நுட்பங்களிடமிருந்து 2000 ஆண்டுகளானாலும் விடுதலைகிடைக்காது. அதற்கு நாம் செய்ய வேண்டியது அவற்றை சிறிது சிறிதா புரிந்து கொள்வதும், சமூகமாக தொழில்நுட்பங்களை இயக்க துவங்குவதும் தான் ஒரே வழி.
உங்களுக்கு இந்த இணையவழி வகுப்பு ஒரு அறிமுகமாக இருக்கும் என்பதை மட்டும் தான் எங்களால் உறுதியாக கூறமுடியும். ஆனால் முழுமையான தொழில்நுட்ப விடுதலைக்கு நாம் ஒன்றிணைந்து சமூகமயமான, மக்கள் மயமான வேலைசெய்யும் போது தான் முடியும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ள கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.