Naked Eye Night Sky Observation

astronomy Aug 28, 2020

கட்டுரை: 10

வெறும் கண்களுக்கு தெரியும் 5 கோள்கள்

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நம்மால் வெறும் கண்களால் ஐந்து கோள்களை காண முடியும். நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், மற்றும் சனி ஆகிய கோள்களை நாம் வெறும் கண்களால் கண்டறிய இயலும்.

பூமியிலிருந்து நாம் பார்க்கும் பொழுது இவை அனைந்தும் வெறும் ஒளிப்புள்ளிகளை போலத்தான் தெரியும். ஆனால் இவற்றை நட்சத்திரங்களிலிருந்து எளிமையாக பிரித்து அடையாளம் காணலாம். இவை நட்சத்திரங்களைப் போல மின்னுவதில்லை. நட்சத்திரங்கள் சுயமாக ஒளிரக்கூடியவை, ஆனால் இந்த கோள்கள் சுயமாக ஒளியை உமிழும் சக்தியற்றவை. இவை சூரியனின் ஒளியை வாங்கி அப்படியே எதிரொளிக்கின்றன. இந்த எதிரொளிப்பு தான் இவை ஒளிப்புள்ளியை போன்ற தேற்றத்தை தருகிறது.

பொதுவாக நாம் கோள்களை சூரியன் வலம் வரும் பாதையிலேயே தான் பார்க்க முடியும். அதாவது கிழக்கில் உதித்து மேற்கில் மறையும் வரை சூரியன் தெரியும் வான்பகுதியை மனதில் கொண்டு இரவு வானை தேடினாலே போதும் கோள்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். கோள்களை காண இரவு வானின் வடக்கு பகுதியிலோ அல்லது தெற்கு பகுதியிலோ தேட வேண்டிய அவசியம் இல்லை.

முதலிம் நாம் புதன் கோளைப்பற்றி பார்க்கலாம். புதன் கோளை காண்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் சில நேரங்களில் நாம் காணலாம். நமது ஊர்களில் சொல்வது போல ”புதன் கிடைத்தாலும், பெண் கிடைக்காது”. சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் அளவிலும் சிறியது, அதே நேரத்தில் அதன் சாய்வு கோணமும் மிகக்குறைவு. எனவே நாம் புதன் கோளை சூரியன் உதிக்கும் நேரத்திற்கு சற்று முன்போ அல்லது சூரியன் மறைந்தது சிறிது நேரத்திலேயோ மட்டும் தான் காணமுடியும். பெருவாரியான நேரங்களில் நமக்கு மேகங்களின் குறுக்கீடு இருப்பதால் மிகவு அரிதாகத்தான் புதன் கோளை நாம் காணமுடியும். இன்னும் சில சமயங்களில் புதன் கோளை பிரமாதமாக காண்லாம். அது புதன் இடைமறிப்பு போன்ற சமயங்களில் நமக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பாகும். இந்த புதன் இடைமறிப்பு உண்மையில் ஓர் அற்புதமான வானியல் நிகழ்வு ஆகும். அதாவது சூரியனின் ஒளிரும் வட்டுப்பகுதியை புதன் கோள் கடந்து செல்லும் நிகழ்வை நாம் பூமியிலிருந்து காணும் நிகழ்வு தான் இந்த புதன் இடைமறிப்பு. இதுவும் ஒரு வகையில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போலத்தான். இது போன்ற ஒரு நிகழ்வு வரும் 2032 ஆம் ஆண்டு தான் மீண்டும் காணக்கிடைக்கும்.

அடுத்தாக வெள்ளி. இதனைத் தான் நாம் விடிவெள்ளி என்று அழைத்து வருகிறோம். மிகவும் பிரகாசமாக தெரியும் வெள்ளி சில மாதங்கள் சூரியன் உதிக்கும் முன்பு கிழக்கு வானிலும், சில மாதங்கள் சூரியன் மறைந்த பின்பு மேற்கு வானிலும் தென்படும். வெள்ளி கோளையும் நாம் வெள்ளி இடைமறிப்பு மூலமாக காணலாம். அதாவது புதன் கோளைப்போன்றே வெள்ளியையும் சூரியனின் ஒளிரும் வட்டுப் பகுதியை கட்ந்து செல்லும் போது காணலாம். இந்த நூற்றாண்டிற்கான இரு வெள்ளி இடைமறிப்பு நிகழ்வுகளும் நடந்து முடிந்து விட்டன. இனி இது போன்ற அரிய நிகழ்வு அடுத்த நூற்றாண்டில் தான் தென்படும்.

அடுத்தாக செவ்வாய் கோள், சிவப்பாக தெரியும் ஒளிப்புள்ளியை கொண்டே இதனை எளிமையாக அடையாளம் காணலாம். இந்த கோள் சூரியனின் சுழற்சிப்பாதையில் பொதுவாக தென்படும் கோளாகும். இதே போலத்தான் மற்ற இரு கோள்களான வியாழனும், சனிக் கோளும். வியாழன் கோள் தான் நமது சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கோள். ஆனால் இந்த கோள் பூமியிலிருந்து மிகவும் தொலைவில் உள்ளதால் ஒரு ஒளிப்புள்ளியை போல தெரியும். இரண்டாவது பெரிய கோளான சனி கோளுக்கும் இதே நிலைமைதான். அதுவும் ஒரு சிறிய ஒளிப்புள்ளியை போலத்தான் தெரியும். ஏனெனின் வியாழன் கோளுக்கும் பூமிக்குமான மிகக் குறைந்த தொலைவு 628,743,036 கிலோமீட்டர்கள் ஆகும், அதிகபட்ச தொலைவு 928,081,020 கிலோமீட்டர்கள் ஆகும். சனிக்கோளுக்கும் பூமிக்குமான குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச தொலைவுகள் முறையே 1.2 பில்லியன் கிலோமீட்டர்கள் மற்றும் 1.67 பில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும்.

இவ்வாறாக நாம் இரவு வானில் வெறும் கண்களைக் கொண்டே 5 கோள்களை அடையாளம் காணமுடியும். முயற்சித்து பாருங்கள். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையெனில் தொடர்புகொள்ளலாம்.


நன்றி !

Tags