Mars May Have Rings!!

astronomy Jul 5, 2020

Surender Ponnalagar | Sun 05 July 2020

கட்டுரை : 1 Mars may have Ring like structure

என்னாது செவ்வாய் கோளுக்கு வளையமா?

நான் பள்ளிகூடங்களில் படித்திருப்போம். சனி கோளுக்கு அழகிய வளையம் உண்டு என்று. அன்று என்னுள் ஒரு ஆசை தோன்றியது. வாழ்நாளில் ஒரு முறையாவது சனிக்கோளின் வளையத்தை பார்த்துவிட வேண்டும் என்று. அன்று பள்ளிக்கூடத்தில் தோன்றிய ஆசை கல்லூரி காலங்களில் நிறைவடைத்தது. முதன் முறையாக சனிக்கோளையும், அதன் வளையங்களையும் தொலை நோக்கி மூலமாக பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. அன்று முதல் வானவியல் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் ஒரு படி கூடியது. அதோடு சேர்த்து தமிழில் வானவியலை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் தொடர்ச்சியாக அதிகரிக்கத் துவங்கியது.

சரி வாருங்கள் நமது கதைக்கு வருவோம். நமது சூரிய குடும்பத்தில் சனிக்கோளை போன்று வளையம் வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களுக்கும் உள்ளது. இவை எல்லாம் மிகப் பெரிய வாயுக்கோள்கள். இதே போன்ற வளையங்கள் இன்னும் சில வான் பொருட்களுக்கும் இருக்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால் இதுவரை உள்வட்ட கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்றவற்றில் வளையம் கண்டுபிடிக்கவில்லை.

சமீபத்தில் கலிஃபோனிய பல்கலைகழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் செவ்வாய் கோளுக்கும் வளையம் உருவாகலாம் என கண்டறிந்துள்ளனர். இது போன்ற வளையம் உருவாக இன்னும் 20-40 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என கணக்கிட்டுள்ளனர்.

சரி இந்த வளையம் எப்படி உருவாகும்? அதாவது செவ்வாய் கோளுக்கு இரு துணை நிலவுகள் உள்ளன. அவை போபோஸ் மற்றும் டைமோஸ். இந்த இரு நிலவுகளில் பெரியது போபோஸ். இந்த துணைக்கோளை தொடர்ச்சியாக ஆய்வு செய்துவந்த விஞ்ஞானிகள், அதன் புறப்பறப்பு மற்றும் அதன் அமைப்புத் தன்மை குறித்து தொடர்ச்சியாக கண்காணித்துள்ளனர். போபோஸின் மேல் நிறைய வெடிப்புகளும், துளைகளும் இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்த அமைப்பானது செவ்வாயின் ஈர்ப்பு புலத்தால் உருவாகும் விசையை தாக்குபிடிக்க கூடிதாக இல்லை என்பதையும் தங்களது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். அதிகப்படியான செவ்வாயின் விசை போபோஸை தன் மீது மோதச் செய்யும். இதனால் உருவாகும் தூசு, சுகள்கள் இணைந்து சனி கோளிற்கு உள்ள வளையத்தைப் போன்ற வளையத்தை உருவாக்கும். இவ்வாறு உருவாகும் வளையத்தில் உள்ள திடமான துகள்கள், கற்கள் செவ்வாயின் மீது காலப்போக்கில் மீண்டும் மோதும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு செவ்வாய் கோளைச் சுற்றி உருவான வளையமும் மறைந்து விடலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிய பல மில்லியன் வருடங்கள் வரை ஆகும். இந்த மோதலினால் செவ்வாயின் புறப்பரப்பில் மிகப்பெரிய அளவில் வேதியியல், அமைப்பியல் மாற்றங்கள் ஏற்படும் எனவும் கணித்துள்ளனர்.

இன்று ஒரு அருமையான வானியல் தகவலுடன் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறோம். மீண்டும் ஒரு ஆச்சரியமான தகவலுடன் உங்களை நாளை சந்திக்கிறோம்.

நன்றி !

Tags