Discovery of New Solar Neutrino

astronomy Jul 5, 2020

கட்டுரை : 3

சூரியனின் உட்பகுதியிலிருந்து வெளிவரும் புதுவகை சோம்பேறி நியூட்ரினோ துகள் கண்டுபிடிப்பு !!

இந்த கோடை காலத்தில் நம்மில் பெரும்பாலோனோர் நிச்சயம் சூரியனை வசைபாடியிருப்போம். “ச்சே என்னா வெயில்.. கதிரவனே உனக்கு இரக்கமே இல்லையா ??..” என்பன போன்ற வசவுகளும், கேள்விகளும் கேட்டுகொண்டேதான் இருக்கும். சரி நாம் நமது விசயத்திற்கு வருவோம். எதற்காக் இந்த சூரியன் இவ்வளவு அதிக வெப்பத்தையும், பிரகாசத்தையும் உமிழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூரியனுக்கு எது இவ்வளவு ஆற்றலை வழங்கிக் கொண்டிருக்கிறது?.

இந்த கேள்விகளுக்கான விடையையும் சேர்த்து எரிந்து கொண்டிருக்கும் சூரியனின் உட்பகுதி எப்படி இருக்கும் என்பன போன்றவற்றை பற்றிய தகவல்களை நியூட்ரினோ எனும் துகள் மூலமாக கண்டறியலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பொதுவாக சூரியன் போன்ற நட்சத்திரங்கள் தனக்கு தேவையான ஆற்றலை அணுக்கரு இணைவு வினை மூலமாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அணுக்கரு இணைவு வினை என்பது ஒன்றிற்கு மேற்பட்ட சிறிய அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து பெரிய அணுக்கருகளை உருவாக்கும் நிகழ்வு ஆகும். அந்தவகையில் சூரியனில் ஹைட்ரஜன் அனுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்கும் போது அளவுக்கதிகமான ஒளியும் வெப்பமும் வெளிப்படுகிறது. இந்த வெப்பத்தையும், ஒளியையும் தான் நாம் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் ஏன இவ்வளவு வெப்பம் என கோபப்பட்டும்கொள்கிறோம்.

இன்று நாம் பார்க்க இருக்கும் நியூட்ரினோவுக்கும் அணுக்கரு இணைவு வினைக்கும் தொடர்பு உள்ளது. பொதுவாக சூரியனில் நடைபெறும் அணுக்கரு இணைவு வினை இரு வழிமுறைகளில் நடைபெறுகிறது. ஒன்று புரோட்டான் - புரோட்டான் சங்கிலி (Proton – Proton chain) வினை மற்றொன்று கார்பன் - நைட்ரஜன் - ஆக்ஸிஜன் சங்கிலி (Carbon – Nitrogen – Oxygen chain) வினை. பெரும்பாலும் புரோட்டான் - புரோட்டான் சங்கிலி வினை மூலமாகத் தான் வினை நடைபெறுகிறது. இந்த வினைகளின் போது இயல்பாகவே நியூட்ரினோ துகள்கள் வெளிப்படும்.

இந்த நியூட்ரினோ துகள்கள் இயற்கையாக எதனுடனும் வினை புரியாது. இந்து ஒரு மந்தத் துகள். இந்த துகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இதற்கு நிறை இல்லை என்று கருதிவந்தனர். இயற்பியலின் வளர்ச்சி மற்றும் சமீபத்திய கண்டுபிடிப்புகள், நியூட்ரினோ துகள்களுக்கும் நிறையுள்ளது என நிறுவியுள்ளது. இந்த பிரபஞ்சத்தின் மூலை முடுக்கள் எங்கும் இந்த நியூட்ரினோ துகள்கள் நிறைந்துள்ளன. எளிமையாக பல கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவை கடந்து வருகின்றன. எனவே இந்த நியூட்ரினோ துகள்களை நாம் ஆய்வு செய்யும் போது பல ஆதிசயமான விசயங்களை, விடை கிடைக்கப்பெறாத வினாக்களுக்கு விடையும் கிடைக்கப்பெறும்.

ஆகவே உலகின் பல நாடுகளிலும் நியூட்ரினோ குறித்த ஆய்வுகள் துவங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவும் இந்த ஆய்வில் இறங்கியுள்ளது. இதற்காக இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் அமையவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வு மையம் அமைப்பதற்காக மக்களின் அனுமதி கிடைக்காததால் கிடப்பில் உள்ளது. அதே போல் உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே முழுமையடைந்த நியூட்ரினோ ஆய்வுகூடங்கள் உள்ளன.

சரி நாம் ஆய்வு குறித்து பேசலாம் வாங்க... நமது நாட்டில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வுமையத்தை போலவே இத்தாலியில் பூமிக்கடியில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கூடம் ஒரு பெரிய நைலான் பலூனால் செய்யப்பட்டு அதில் 278 டன் நீர்ம ஹைட்ரோகார்பன் எனும் அடர்த்தி நிறைந்த பொருளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஏனெனில் நியூட்ரினோவின் வினை புரியும் தன்மையை அதிகப்படுத்தவும், மற்ற வினைபுரியும் துகள்களை வடிகட்டவும். அவ்வாறு நியூட்ரினோ துகள்கள் வினை புரியும் போது ஒரு மெல்லிய ஒளிகற்றையை விட்டுச்செல்லும். இந்த ஒளியை ஆய்வு செய்வதன் மூலமாக நாம் இந்த நியூட்ரினோக்களின் பிறப்பிடம், அதன் தன்மை குறித்த ஆய்வுகளின் ஈடுபடமுடியும். ஒவ்வொரு நியூட்ரினோக்களுக்கும் ஒரு வகை ஆற்றல் இருக்கும். இந்த ஆற்றல் வேறுபாடை பயன்படுத்தி நியூட்ரினோக்களின் வகைகளை அறிந்துகொள்ளமுடியும். அந்த வகையில் இத்தாலிய விஞ்ஞானிகள் இதுவரை காணக்கிடைக்காத ஒரு புதியவகை நியூட்ரினோக்களை கண்டறிந்துள்ளனர்.

நாம் மேலே குறிப்பிட்டபடி நியூட்ரினோ துகள்கள் பெரும்பாலும் புரோட்டான் - புரோட்டான் சங்கிலி (Proton – Proton Chain) மூலமாக கிடைத்துவருகின்றன. இந்த வகை நியூட்ரினோக்கள் எண்ணிக்கை அதிகம் காரணமாக நாம் எளிதில் ஆய்வு செய்துவிடலாம். ஆனால் கார்பன் - நைட்ரஜன் - ஆக்ஸிஜன் சங்கிலி (Carbon – Nitrogen – Oxygen chain) வினை மூலமாக கிடைக்கும் நியூட்ரினோக்களை காண்பது கடினம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் இந்த வகை நியூட்ரினோக்களுக்கான தடம் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது நியூட்ரினோக்கள் குறித்த ஆய்வின் தளத்தை ஒருபடி முன்னெடுத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை..

மீண்டும் ஒரு ஆச்சரியமான ஆய்வு மூலமாக சந்திக்கலாம்..

நன்றி !!

OSF Website

Tags