திருவாதிரை விண்மீன் தனது ஒளியை குறைத்ததற்கு இது தான் காரணமா?

astronomy Jan 26, 2021

இரவு வானம் நமக்கு திறந்து வைத்திருக்கும் திரையரங்கில் நித்தம் பல வானவேடிக்கைகள் அரங்கேறி கொண்டே தான் இருக்கும். அப்படி கடந்த 2019 அம் ஆண்டு இறுதிவாக்கில் நமக்கு காண கிடைத்த ஒரு அதிசயம் தான் இந்த திருவாதிரை விண்மீனின் ஒளி குறைப்பு நிகழ்வு.

நமது சூரிய மண்டலத்திலிருந்து சுமார் 700 ஒளி ஆண்டுகள் (Light Years ) தொலைவில் உள்ள இந்த திருவாதிரை அதாவது Betelgeuse எனும் விண்மீன் இரவு வானின் பிரகாசமான விண்மீன்களில் ஒன்று. ஓரையான் (Orion) எனும் வேட்டைக்காரன் விண்மீன் தொகுதியில் உள்ள இந்த விண்மீனானது எளிமையாக அடையாளம் காணக்கூடிய ஒரு விண்மீன். 2019-ம் ஆண்டில் துவக்கத்தில் இந்த விண்மீனின் பிரகாசத்தில் பெரிய அளவிலான வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் ஆய்வு செய்கையில் அதன் பிரகாசம் சுமார் 64% குறைந்து போயிருந்தது.

Orion விண்மீன் தொகுதி

இந்த் ஒளி குறைவானது உடனடியான அனைவரது மனதிலும் உருவாக்கிய வியப்பு என்னவெனில், திருவாதிரை வெடித்து சிதறப்போகிறது, அதனால் ஒரு வண்ணமயமான சூப்பர்நோவா (Supernova) ஏற்படபோகிறது என பல அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அவ்வாறு அறிக்கைகள் பல வர காரணம் திருவாதிரை விண்மீனானது ஒரு சிவப்பு அரக்கன் (Red Giant) வகை விண்மீனாகும். இங்கு அரக்கனுக்கும் நமது கற்பனைக்கு இடமில்லை. அது ஒரு விண்மீன் வகைபாடு தான். அதாவது இந்த வகைபட்ட விண்மீன்கள் மிக பிரமாண்டமாகவும், சிவப்பு நிறமாகவும், அதிக வெப்பம் உமிழும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

சிவப்பு அரக்கன் வகை விண்மீன்களை பற்றி புரிந்துகொள்ள முதலில் நாம் விண்மீன்களின் தோற்றம் மற்றும் மறைவு குறித்து அறிந்துகொள்வதும் அவசியம். ஒரு விண்மீனாது நெபுலா (Nebula) எனும் ஊடுமண்டல மேகத்திரட்சிகளின் மூலமாக உருவாக்கம் பெருகிறது.

Orion Nebula

அப்படி திரளும் மேகதிரட்சியானது அதிகப்படியான ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் ஹீலியம் (Helium) வாயுக்களின் திரட்சியாகவும் மற்றும் பல தனிமங்களின் ஊற்றுகண்ணாகவும் இருக்கும். இங்குள்ள அதிகப்படியான ஹைட்ரஜன் ஒன்றோடொன்று இணைய முற்படும் நிகழ்வானது அணுக்கரு இணைவு (Nuclear Fusion) வினையை தூண்டுகிறது. இதன் மூலமாக அதிகப்படியான வெப்பமும், ஆற்றலும் கொண்ட இளம் விண்மீனாக உருவாக துவங்குகிறது.

பொதுவாக ஒரு விண்மீனின் ஆயுட்காலமானது அதிலுள்ள ஹைட்ரஜனின் (Hydrogen) அளவை பொருத்து தீர்மானிக்கப்படும். விண்மீன்களுக்கான எரிபொருள் என்பது ஹைட்ரஜன் தான். இந்த எரிபொருள் முழுவதுமான ஒரு விண்மீனின் தீர்ந்துபோகும் போது அந்த விண்மீன் ஹைட்ரஜனை விட நிறை சற்று மிகுதியான ஹீலியமை எரிபொருளாக பயன்படுத்த துவங்கும். ஒருவேளை ஹீலியமும் தீர்ந்துபோகும் போது அதனைவிட நிறை அதிகமான தனிமங்களை எரிபொருளாக பயன்படுத்தும்.

இப்படி படிப்படியாக ஒரு விண்மீன் தனது ஆற்றலுக்காக உயர் நிறை கொண்ட தனிமங்களை பயன்படுத்தும் போது அதன் அளவானது மிகவும் பிரமாண்டமானதாக ஊதி பெருகும். இந்த நிலையை அடையும் விண்மீன் தான் சிவப்பு அரக்கன் வகை விண்மீன்கள் என்கிறோம்.

இப்படியாக சிவப்பு அரக்கன் நிலையை அடைந்த திருவாதிரை அதன் வெடிப்புநிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதனை தான் நாம் சூப்பர்நோவா என நாம் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் உண்மை அதுவல்ல.

திருவாதிரை போன்ற பிரமாண்ட விண்மீன்கள் வெடித்து சிதறும் முன்பாக அதன் புறப்பரப்பில் ஈர்ப்புவிசையின் வலிமை குறைந்துகொண்டே வரும். இந்த ஈர்ப்பு விசை குறைவானது விண்மீனின் புறப்பரப்பில் உள்ள சூடான வாயுக்களை விண்வெளியில் உமிழத்துவங்கும்.

இப்படிபட்ட ஒரு உமிழ்வானது திருவாதிரையிலும் நிகழ்ந்துள்ளது. ஆச்சரியம் என்னவெனில் திருவாதிரையில் இந்த உமிழ்வு நிகழ்ந்து 700 ஆண்டுகள்ஆகிவிட்டது. தற்போது தான் நமது கண்களுக்கு அந்த ஒளி வந்தடைந்துள்ளது. ஏனெனில் நாம் முன்பே பார்த்தது போல நமக்கு திருவாதிரைக்கும் இடைப்பட்ட தொலைவானது சுமார் 700 ஒளி ஆண்டுகள்.

இதுபோன்ற திடீர் வெப்ப உமிழ்வானதுதனது வெப்பத்தை இழந்து குளிர்வடையும் போது அது ஒளியை உள்வாங்க்கிகொள்ளும் பொருளாக மாற்றமடைகிறது. திருவாதிரையில் நடைபெற்றதும் இது தான். இதனை Hubble தொலைநோக்கியானதுதனது ஆய்வின் மூலமாக உலகறியச் செய்தது.

ஆகவே நாம் எதிர்பார்த்திருந்த வானின் வர்ணஜாலமான சூப்பர்நோவா இந்த முறை நமக்கு காணகிடைக்காது. நாம் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற இன்னும் பல வர்ணஜாலங்கள் நமக்கு இரவு வானில் பல காத்திருக்கின்றன. அவற்றைபற்றி பல தகவல்களை நாம் தொடர்ந்து பேசலாம்.. எங்களுடன் இணைந்திருங்கள்.. அறிவியலை கொண்டாடலாம்...

நன்றி !!


Tags