Indian Observatories Part - 1

astronomy Aug 7, 2020

கட்டுரை: 7

இந்திய வானவியல் ஆய்வு நிறுவனங்களும் நோக்குகூடங்களும்

உலகின் பல நாடுகளும் விண்வெளி அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் வேலையில், நமது இந்தியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்று நாம் இந்தியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம். அந்தவகையில் இன்று நாம் இமயமலையின் லடாக் (Ladak) பகுதியில் அமைந்துள்ள வானவியல் நோக்குகூடமான ஹென்லே நோக்குகூடத்தைப் (Hanle Observatory) பற்றி பார்க்கலாம்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4517 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த நோக்குகூடம் இந்திய வான்இயற்பியல் ஆய்வுநிறுவனத்தால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இங்கு சிறப்பு வாய்ந்த இரு முக்கிய தொலைநோக்கிகள் உள்ளன. அவையாவன 2 மீட்டர்கள் விட்டமுடைய ஒளியியல் அகச்சிவப்பு (Optical Infra Red) கதிர் தொலைநோக்கி மற்றும் ஹாஹர் (HAGAR) எனப்படும் உயர்மட்டத்தில் அமைந்துள்ள காமா கதிர்கள் ஆய்வு தொலைநோக்கி (High Altitude Gamma Ray Telescope) .

இந்த 2 மீட்டர் ஒளியியல் அகச்சிவப்பு கதிர் தொலைநோக்கி தான் ஹிமாலயன் சந்திரா தொலைநோக்கி என அழைக்கப்படுகிறது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கியானது கடந்த 2003-ல் தனது அறிவியல் ஆய்வை துவங்கியது. கடல்மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில் அமைந்துள்ளதாலும், மனிதர்கள் தங்கி ஆய்வு செய்ய ஏதுவான சூழல் குறைவாக இருப்பதாலும் இந்த தொலைநோக்கியை பயன்படுத்த தனியாக சிறப்பான CREST செயற்கைகோள் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலைநோக்கியில் மூன்று முக்கிய உபகரணங்கள் உள்ளன. அவையாவன, மிக நுண்ணிய வான்பொருட்களை கண்டறிய உதவும் Himalayan Faint Object Spectrograph (HFOSC), அகச்சிவப்பு கதிர்கள் மூலமாக படமெடுக்கக்கூடிய The Near Infrared Imaging Spectrograph (TIRSPEC) மற்றும் Hanle Echelle Spectrograph (HESP). இவற்றின் மூலமாக இந்த தொலைநோக்கி மிகச்சிறப்பாக ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

மற்றொரு தொலைநோக்கியான ஹாஹர் (HAGAR) எனப்படும் உயர்மட்டத்தில் அமைந்துள்ள காமா கதிர்கள் ஆய்வு தொலைநோக்கி (High Altitude Gamma Ray Telescope). இது வளிமண்டலத்தில் உள்ள செரன்கோவ் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்யும் தொலைநோக்கியாகும். இந்த தொலைநோக்கி 7 தொலைநோக்கிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு வடிவமைப்பாகும். இந்த 7 தொலைநோக்கிகளில் ஒவ்வொருன்றும் ஏழு கண்ணாடிகளை கொண்ட அமைப்பு. ஒவ்வொரு கண்ணாடியும் 4.4 சதுர மீட்டர் அளவுடையது.

இந்த ஹாஹர் தொலைநோக்கியாது மும்பையில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்துவருகிறது.

இது போன்ற பல ஆய்வுகளை இந்திய வானவியல் நிறுவனங்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. அடுத்தடுத்த கட்டுரைகளில் இந்திய வானவியல் ஆய்வு நிறுவனங்களின் தொகுப்பை காணலாம்.

நன்றி !!!

Tags