Night Sky Observation @ Ambedkar Community Computing Center - Bangalore

Democrazily Science Dec 26, 2020

வானம் எவ்வளவு அழகானது என்பது அதனை ரசிப்பவர்களின் வார்த்தைகளை கேட்கும் போது தான் தெரிகிறது.

நிற்க நேரமில்லாமல் தொடர்ந்து பறந்து கொண்டே இருக்கும் பரபரப்பான நகரத்து மக்களுக்கு வானத்தை பார்க்க எங்கே நேரம் இருக்கிறது. அப்படியே பார்த்தாலும் தெரிவதெல்லாம் மின்விளக்குகளின் செயற்கை வெளிச்சங்கள் தான்.

நகரம் என்பதே உழைக்கும் மக்களின் சரணாலயம் எனலாம். பொதுவாக நகரத்து உழைக்கும் மக்களில் இரு வகை உண்டு.  ஒன்று தனது அன்றாட தேவைகளுக்காக ஓடாய் தேயும் உழைப்பாளிகள். இரண்டாவது அவர்களை சுரண்டி (அது தான் அவர்களது மொழியில் உழைப்பு) அதன் மூலம் வரும் லாபத்தை வைத்து பிழைப்பு நடத்தும் களவானி கூட்டம். இந்த இருவருக்கும் நிற்க நேரம் இருக்காது.

இவர்கள் இருவருக்குமே வானம் அந்நியம் தான். உழைக்கும் கூட்டத்திற்கு வானத்தை பார்ப்பதால் எதுவும் விடியப்போவதும் இல்லை. சுரண்டும் கூட்டத்திற்கு வானம் ஒரு வேடிக்கை பொருள். வேடிக்கை காட்டினால் wow என வாயை பிழந்து பார்ப்பார்கள்.

இப்படி இருக்கையில், நகரம் இரண்டு வேடமிட்டு நமக்கு தோற்றம் தரும். பிரமாண்ட மாட மாளிகைகளோடு ஒரு வேடமும், குடிசைகளும், தகர கொட்டகைகளுமாக மற்றொரு வேடமும் நகரத்தின் இயல்பு. குடிசைகளுக்கும், தகர கொட்டகைகளுக்கும் குடிதண்ணீர் கூட தங்கம் போல தான். பிரமாண்ட மாட மாளிக்கைகளில் காலை கடனை கழுவுவது கூட குடி தண்ணீரில் தான். ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த நகரத்து வாழ்க்கையில் குடிசையில் குடிகொண்டவன் குழந்தைக்கு பள்ளிகூடங்களும், தரமான கல்வியும் கண்கட்டி வித்தை தான்.

இந்த நிலையில் தான் பெங்களூரில் இளைஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுவரும் “அம்பேத்கார் சமுதாய கணினி மையம்” குறித்த தகவல் கிடைத்தது. பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்று ஒரு கணினி மையம் இயங்குவது எங்களை ஆர்வப்படுத்தியது.

இந்த மையத்தில் சுமார் 70 குழந்தைகள் தினம் தோறும் கணினி, அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்றவற்ரை இயல்பாகவும், செயல்முறையாகவும் கற்று வருகிறார்கள். இவற்றையெல்லாம் கண்ட எங்களுக்கு மேலும் ஆர்வம் தொற்றிகொண்டது. உடனடியாக திட்டமிட்டோம். இந்த மாதம் வானில் தெரிந்த அபூர்வ நிகழ்வான வியாழன் - சனி கோள்களின் பேரிணைவை தொலைநோக்கி மூலமாக இங்கிருக்கும் மாணவர்களுக்கு காட்டிடலாம் என திட்டமிட்டுமுடித்தோம்.

இந்த திட்டமிடலை கணினி மையத்தின் நிர்வாக குழுவிற்கு தெரிவிக்கவுமே உடனடியாக சம்மதம் கிடைத்தது. அதன்படி 20 டிசம்பர் 2020 அன்று மாலை தொலைநோக்கியை கொண்டு சென்றோம். முதன்முறையாக தொலைநோக்கியை பார்த்த மாணவர்களின் கண்களின் குதூகலத்தை காண கண்கோடி வேண்டும்.

வியாழன் மற்றும் சனி கோள்களை பார்த்த போதும், நிலவை பார்த்த போதும் மாணவர்களின் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியையும், அவர்களது வார்த்தைகளில் துள்ளிவிழுந்த ஆனந்த தாண்டவத்தையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. இதுவரை நாங்கள் கண்ட நிகழ்ச்சிகளிலேயே இது தான் வானம் எவ்வளவு அழகானது என்பதை உணரச்செய்தது.

நீங்களும் அறிவியலை ரசிக்க, இதுவரை யாருக்கு அறிவியல் மறுக்கப்பட்டதோ அவர்களிடம் சென்று பேசிப்பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் அறிவியல் அழகானதாக இருக்கும்.

நன்றி !

Tags