India's First Quantum High Precision Clock | இந்தியாவின் முதல் அதி துல்லியமான கடிகாரம்

astronomy Aug 28, 2020

கட்டுரை: 11

இந்தியாவின் முதல் அதி துல்லியமான கடிகாரம்

கடிகாரம் என்றாலே நமக்கு நினைவுக்குவருவது அதன் துல்லியத்தன்மை தான். ஒரு சில கடிகாரங்கள் மணி நேரத்தையும் நிமிடங்களையும் மட்டும் காண்பிக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில மின்னனு கடிகாரங்கள் வினாடியை கூட காட்டும். இன்னும் சில விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் கடிகாரம் வினாடிக்கும் குறைவான நேரத்தையும் காட்டும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இது போன்ற பல கடிகாரங்கள் நடைமுறையில் உள்ளன. நினைத்துபாருங்கள் ஒரு கடிகாரம் தனது துல்லியத்தன்மையில் இந்த பிரபஞ்சத்தின் வயதான 13.6 பில்லியன் ஆண்டுகளில் வெறும் ஒரே ஒரு வினாடியை மட்டும் தான் தவறவிடுமாம். அவ்வளவு துல்லியமான கடிகாரம் நமது இந்தியாவில் வடிவமைக்கப்படவுள்ளதாம். ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள் இந்த ஆய்வை குறித்து பேசலாம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரத்தில் அமைந்துள்ளது பல்கலைகழகங்களுக்கான வானவியல் மற்றும் வான் இயற்பியல் ஆய்வு நிறுவனம் (Inter University Centre for Astronomy and Astrophysics – IUCAA). இந்த நிறுவனத்தில் தான் இந்த அதிதுல்லியமான கடிகாரம் நிறுவப்படவுள்ளது.

குவாண்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்து வடிவமைக்கப்படவுள்ள இந்த கடிகாரம்  IUCAA-ன் Precision and Quantum Measurement (PQM) ஆய்வகத்தில் நிறுவப்படவுள்ளது. இதற்கான நிதியானது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள திட்டமான National mission on Quantum Technology மூலமாக வழங்கப்படுகிறது. இந்த துல்லியமான கடிகாரம் திட்டம் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்படவுள்ள திட்டமாகும்.

இதுவரை உலக நாடுகளில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மட்டும் தான் இது போன்ற அதி துல்லியமான கடிகாரத்தை வடிவமைத்துள்ளனர். இந்தியாவும் இந்த அதி துல்லிய கடிகாரத்தை வடிவமைக்கும் போது பிரமாண்டமான அறிவியல் ஆய்வுகளில் இந்தியாவின் பங்களிப்பும் அளப்பரியதாக இருக்கும்.

இந்த அதிதுல்லியமான கடிகாரம் பிரமாண்டமான அறிவியல் ஆய்வுகளான ஈர்ர்பு அலைகள் குறித்த ஆய்வு, 30 மீட்டர் தொலைநோக்கி, கரும்பொருள் குறித்த ஆய்வுகளில் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தும்.

Tags