பறவைகள் அறிவோம்: மஞ்சள் மூக்கு ஆள்காட்டி - Yellow Wattled Lapwing

birds Nov 20, 2020
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி - yellow wattled lapwing (Scientific Name: Vanellus Malabaricus) | Photo Credit: Amaljith

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி அல்லது மஞ்சள் மூக்கு ஆட்காட்டி (Vanellus malabaricus) இந்திய துணைக்கண்டம் மட்டுமே வாழ்விடமாகக்கொண்ட ஆள்காட்டி இனமாகும். இவை மிகுதியாக இந்திய தீபகற்பம் கொண்டுள்ள காய்ந்த பிரதேசங்களில் காணப்படுகின்றன. கூரிய ஒலியும் வேகமாக பறக்கும் தன்மையும் உடையன இவை. இவை வலசை போகாவிடினும், சீதோஷண நிலைக்கும் பருவ மாற்றத்திற்கும் ஏற்ப, முக்கியமாக மழைக்கேற்ப, இடம்பெயர்தல் உண்டு.

இவை இந்தியாவில் பொதுவாக திறந்தவெளி சுற்றுச்சூழல்களில் காணப்படுகின்றன. சிவப்பு மூக்கு ஆள்காட்டியை ஒப்பிடும் போது இவை மிகவும் வறட்சியான பிரதேசங்களிலும் காணப்படும். பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலும் பரவியுள்ளன. மழைக்கேற்ப இவை இடம்பெயர்தலின் வழித்தடங்கள் இன்னும் சரிவர ஆராயப்படவில்லை.[5]

சில நேரங்களில் இவற்றை கத்மண்டு பள்ளத்தாக்கிலும் காண இயலும்.

உருவ நிறங்கள்

இதன் உடல் அளவு காகத்தின் அளவை ஒத்திருப்பதோடு, இவை நீரிலும் நீர்நிலைகள் அருகிலும் பூச்சி உண்ணும் பறவையினங்களை ஒத்த அளவில் உள்ளன. இவை உடல் முழுதும் ஒரே நிறமான பழுப்பு கொண்டிருக்க தலை உச்சியில் தொப்பி வைத்தது போல் கருப்பு நிறம் கொண்டிருக்கும். தொப்பிக்கும் உடலின் பழுப்பு நிறத்திற்கும் இடையில் வெள்ளை வண்ணத்தில் இடைவேளை காணப்படுகிறது.
அது போக பிரகாசமான மஞ்சள் கால்களும், கருப்பான அலகும் உள்ளது. சிறப்பான அம்சமாக மஞ்சள் நிறத்தில் தலையும் மூக்கும் இணையும் இடத்தில் முக்கோணம் வடிவில் திட்டும் உள்ளதனால் இதன் பெயர் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing) என அறியப்படுகிறது. இவற்றின் தனிப்பட்ட தோற்ற அமைப்பால் இவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இயலும். எனினும் தொலைவிலிருந்து பார்க்கும் வேளையிலோ அல்லது வெளிச்சம் மிகுதியாக இருக்கும் நேரத்திலோ இவை சிவப்பு மூக்கு ஆள்காட்டி போல இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கன்னமும், தாடையும் கருப்பும், வெள்ளை வண்ண வயிற்றை ஒரு கருப்பு கீற்று பிரிக்கிறது. வாலின் பின் நுனியிலும் கருப்பு நிறம் கானப்படுகிறது, எனினும் இவை வாலின் பின் எல்லை வரை செல்வதில்லை. இறகுகளின் நடு பக்கத்தில் வெள்ளை தென்படும்.

உருவ அளவுகள்

மஞ்சள் மூக்கு ஆள்காட்டி துணை இனங்கள் இல்லா பறவையாகும், எனினும் இவற்றின் உடலளவு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லுங்கால் வளர்வதைக்காண இயலும். இவை 260-280 மி.மீ. நீளமும் 192-211 மி.மீ. அகல இறக்கையும், 23-26 மி.மீ. நீள அலகையும், 71-84 மி.மீ. கால்களையும் கொண்டிருக்கின்றன. இருபாலினங்களும் ஒன்றுபோல் காட்சியளித்தாலும் ஆண்கள் சற்றே அதிக நீளமுள்ள சிறகுகளோடு பறக்கின்றன.

வாழ்விடங்கள்

இவை திறந்தவெளிகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்வதோடு இடைவேளைகள் மிகுதியாக உள்ள முட்காடுகளையும் சார்ந்திருக்கும்.

உணவு

மஞ்சள் மூக்கு ஆள்காட்டிகள் வண்டுகள், கறையான்கள், பூச்சிகள், மற்றும் பலவகையான சிறு முதுகெலும்பில்லா பிராணிகளை உட்கொள்கின்றன.

இனவிருத்தி

இவ்வகைப்பறவைகள் மார்ச் முதல் மே மாதங்களான காய்ந்த காலங்களில் மழைக்காலத்திற்கு முன் இனவிருத்தி செய்ய விழைகின்றன.

புணர்ச்சிக்கு முன்

இது இனவிருத்தி காலங்களில் தன் கருப்பு கொண்டையை சிறிதாக உயர்த்த இயலும். அருகே உள்ள தருணங்களில் பல ஆண் பறவைகள் பல பெண் பறவைகளை ஈர்க்க முயற்சிகின்றன.

கூடும் முட்டைகளும்

மற்ற ஆள்காட்டி பறவைகளைப்போல் இவையும் தரையின் மீது சிறு கூழாங்கற்களை வட்ட வடிவில் சேமித்து வைத்து எளிதில் புலப்படாதவாறு அமைக்கின்றன. கூடுகள் கட்ட புல்லை கொத்தாக உபயோகிக்கும்.  இவை 4 முட்டைகளை நிலத்தில் அமைந்த தன் கூட்டில் இடுகின்றன. பெற்றோர் தன் மார்பிலுள்ள இறகுகளை 10 நிமிடங்கள் வரை நனைத்து (தொப்பையை நனைத்தல்) பின் கூட்டுக்கு திரும்பி தன் முட்டைகளையோ குஞ்சுகளையோ குளிர்வடைய வைக்கின்றன. ஒரு ஆய்வில் 60 சதவிகித கூடுகளில் 4 முட்டைகளும், மற்றவை 3 முட்டைகளும் கொண்டிருந்தன. எனினும், பொரிக்கும் ஆற்றல் 27.58 சதவிகிதமே, ஏனென்றால் முட்டை உண்ணிகளின் தாக்குதலாலும், எதேச்சையாக கூடுகள் பழுதாவதையும் காரணமாக கண்டறிந்துள்ளனர். 27-30 நாட்கள் வரை அடைகாக்கும் நேரம். கூடுகளை நெருங்குங்கால் பெரிய பறவைகள் காயம் பட்டது போல் நடித்தும் கத்தியும் தன்பால் கவனத்தைத்திருப்பி கூட்டை பாதுகாக்கும்.

குஞ்சுகள்

சில நாட்கள் இடைவேளையில் இட்டிருந்தாலும், நான்கு முட்டைகளும் ஒரே நேரத்தில் பொரிக்கும். குஞ்சுகள் பொரித்த சில விநாடிகளிளேயே தானே ஓட இயலும் என்பதனால் தன்னைத்தானே காத்துக்கொள்ளவும், பெற்றோருடன் இணைந்து உணவைத்தேடவும் செய்கின்றன. குஞ்சுகள் தன் சுற்றுப்புற சூழலிற்கேற்றாற்போல் வண்ணங்கள் கொண்டிருப்பதனால் இவை தன் பெற்றோர் அபயக்குரல் எழுப்பும் வேளையில் தரையோடு ஒன்றி சிறு அசைவுமின்றி அமரும். முதலில் இட்ட முட்டைகள் பொரிந்தாலும் தன் இனத்தைக்காக்க இரண்டாவது முறையும் முட்டையிடும் பழக்கம் உடையவை இப்பறவையினம். அப்படி இடுங்கால், முந்தைய ஈணில் பிறந்த குஞ்சும் பெற்றோருடன் இணைந்து அடைகாத்தலை கண்டறிந்துள்ளனர். குஞ்சுகளைக் காக்க பெரிய பறவைகள் காயம் பட்டது போல் நடித்தும் கத்தியும் தன்பால் கவனத்தைத் திருப்பி பாதுகாக்கும்.

குறிப்பு: இந்த தகவல் விக்கிபீடியா தளத்தில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

Tags